Monday, January 21, 2008

"'கொரில்லா 'துறவி" (மெய்யுள், பக்:33): மு.தளையசிங்கம் என்னும் ஈழத்து மெய்யியலாளர்


மு.தளையசிங்கத்தை (இனி மு.த.)ஒரு எழுத்தாளராகவும் ஓர் இலக்கிய விமரிசகராகவும் பார்ப்பது பொதுவனதுதான். அவர் தனது நுழைவை ஓர் படைப்பளியாகத் தொடங்கியிருக்கிறார். அதிலிருந்து மருவி இலக்கிய விமரிசகராக மாறியிருக்கிறார்.

இந்த நிலையில் நின்று கொண்டு அவர் எழுதிய எழுத்துக்கள் இலக்கியப் பரப்பின் எல்லைக்குப் புறம்பே பரவுகின்றன என்பதுதான் இங்கு மு.த வைப்பற்றிச் சுட்டவேண்டியது. அவருடைய ஷபுதுயுகம் பிறக்கிறது| கொஞ்சமாகவும் ஷபோர்ப்பறையும்| ஷமெய்யுளும்| முழுமையாகவும் இலக்கியம் என்ற தளத்திலிருந்து விலகி அடுத்தகட்ட அறிவுத்தோற்றவியல் (Epistemological) எல்லைக்குள் நுழைந்து நிற்பவை.

ஆகவேதான் மு.தவை ஓர் இலக்கியவாதியாகப் பார்ப்பதைவிடவும் ஈழத்துத் தமிழ்ச்சூழலில் வாழ்ந்த மெய்யியலாளராகப் (Philosopher)பார்ப்பது உரியது.

முதலாவதாக மு.தவின் எழுத்துக்கள் மிகவும் கொஞ்சமே கிடைப்பதாலும், அவர் வாழ்ந்து செயற்பட்டுச் செய்துவிட்டுச் சென்ற பதிவுகளும் கொஞ்சமாகவே இருப்பதாலும் அவற்றை மட்டும் வைத்துக் கொண்டு அவர் ஓர் தமிழின் சிந்தனை மரபுக்குரிய அடையாளம் அல்லது பிரதிநிதி என்று சொல்லவும் முடியாது. ஒருவருடைய சிந்தனைத்த திறத்தை எடைபோடுவதற்கு அவருடைய நீண்ட வாழ்நாள் தேவையற்றதாயினும் வெளிப்பாடுகள் தேவையாயிருக்கின்றன.

இரண்டாவதாக அவருடைய எழுத்துக்களில் கிடைப்பவற்றில் முதலில் வெளிவந்த ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி மற்றும் தொடக்க காலப் படைப்புக்களில் இலக்கியம் தூக்கி நிற்கிறது. ஆக மிஞ்சியிருக்கும் எழுத்துக்களில் மெய்யியல் சிந்தனை என்ற அளவில் பார்ப்பதற்கு வெளிப்படையாக உள்ளவை மூன்றே நூல்கள்தான்.

அதைவைத்துக்கொண்டு மட்டும் ஒருவருடைய சிந்தனைப் போக்கைப் படம்போட்டுப் பார்த்துவிடமுடியாது என்றாலும் மு.தவின் துருத்திக்கொண்ட வெளித்தெரியும் கருத்துக்கள் சொல்பவற்றை அடையாளம் காண முடிகிறது.

மு.தவின் வெளிப்பாடுகளை இரு நிலைகளாகப் பரிக்கலாம்.
ஒன்று: இலக்கியக் காலகட்டம் (Episteme ?). இரண்டு: மெய்யியல் காலகட்டம்.

இரண்டாம் பகுதியில் அவர் நின்ற நீண்டகாலம் செயற்பட்டிருப்பாரானால் முற்று முழுதான ஆன்மீக வாதியாக மாறியிருப்பாரோ என்று ஐயம் தரும்படி எழுத்துக்களில் குறிப்புக்கள் கிடைக்கின்றன.

ஆயினும் அவரது பிற வெளிப்படுத்தல்லகளில் அவருடைய தேடல் திறன் பல இடங்களில் வெளிப்பட்டிருப்பதையும்; நாம் கணமுடியும். அந்தத் தேடல்திறம் அவரை ஓர் ஆன்மீக வாதியாக முற்றுமுழுதாக அமுங்கிப்போய்விட விட்டிருக்காது என்ற ஊகிக்கவும் இடமுண்டு.

முத.வின் இலக்கியக் காலகட்டத்தில் எழுதியவற்றை முன்புள்ள பகுதிகளில் அவருடைய பார்வைகளாகப் பாரத்திருக்கிறோம். அவை விமிரிசனமாயினும் அவற்றுக்கு அடுத்த நிலையில் அதாவது ஏழாண்டு இலக்கிய வளர்ச்சிக்குப்பிற்பாடு, அவர் எவ்வகை இலக்கியம் மனிதருக்குத் தேவை என்பதை முன்வைக்கிறார்.

மெய்யுளில் அவர் எடுத்த எடுப்பிலேயே இலக்கியம் என்றால் என்ன? எப்படியிருக்கிவேண்டும்? அது எதற்காக? போன்ற வினாக்களுடன் புறப்படுகிறார். இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். மு.தவின் மெய்யியல் என்பது நம் கட்டமைப்பில் உருவாவது. அவர் செய்தது அல்ல.

அவர் தனது எழுத்துக்களை இலக்கியத்தின் அடுத்த கட்டமாகத்தான் எழுதிவந்தார்.

அந்தவகையில் பூரண இலக்கியம் என்பதே இலக்கியத்தின் உண்மை நோக்கத்தை நிறைவேற்றும் தன்மையுடையது என்று முன்வைக்கிறார்.

பூரண இலக்கியம் தனது சமூகத்தைக் குணப்படுத்தவேண்டும் என்கிறார். நோயுற்ற சமூகத்துக்கு பூரண இலக்கியம் குணப்படுத்தல் என்ற வகையில் பணியாகச் செய்யவிருப்பவை மனித குலத்துக்கு தேவை என்கிறார். சமூகத்தின் நோய்களைத் தீரப்பதே இலக்கியத்தின் பணி. அதனைச் செய்யத் தகுதியுடையதே பூரண இலக்கியம்.

உள, பொருளாதார, சமூக வேறுபாடுகள் உள்ள நிலையில் அதை ஏற்றுக்கொண்டுவாழும் மனிதர் நோயாளிகள்தான் என்கிறார். அதற்கு தீர்வு தர மார்க்சியத்தால் முடியாது என்கிறார். உலகில் உள்ள பிற கோட்பாடுகள் போதுமானவையல்ல.

அவரைப்பொறுத்தவரை இருக்கும் எந்த ஒரு அணுகுமுறையும் சமூகத்தின் ஒட்டுமொத்த நோயையும் தீர்க்க வல்லது அல்ல. அந்நிலையில் ஒட்டுமொத்த சிக்கலையும் தீரப்பதற்கு ஒட்டுமொத்த அணுகுமுறைச் சேர்க்கையிலான ஒன்று தேவை.

மனிதரை பிராய்டு பாரத்ததுபோலவோ(உள வேறுபாட்டுச்சிக்கல்களை மட்டும் மமையமாக்க கொண்டு) மார்க்ஸ் பார்தத்துபோலவோ (பொருளாதாரா அடிப்படையிலான வேறுபாடுகளை மட்டும்கொண்டு -- வரலாற்று -- இயங்கியல்) அல்லது மதங்களின் தனிப்பட்ட அணுகுமுறைகளை மட்டும்கொண்டு உலகின் சிக்கல்கள் தீரக்கப்படமுடியாதவை.

ஆக அதற்கான வழிமுறைகளாக அந்தந்தச் சமூகத்தில் உள்ள ஆன்மீக அல்து மரபாக வழிவந்த மனிதநேய அணுகுமுறைகள் மற்றும் மேற்சொன் வழிமுறைகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த அணுகுமுறையே ஒட்டுமொத்த நன்மைதரும் சமூகக் கடமைப்பை உருவாக்கும். மனிதரை மகிழவாக வாழவைக்கும் என்ற கருதுகிறார்.

மார்க்ஸ்(Marx), எகல் (Hegel) அரவிந்தர், புதிய அறிவியல் அறிஞர்கள் (Julian Huxley, Teilhard de Chardin )ஆகியோரது
' ...கருத்துக்களோடும் இணைத்து புதுஅடிவானங்களைத் தொடும் வகையில் விரித்து வளர்ப்பதே இன்றைய சரித்திர, பரிணாம வளர்ச்சிச் சுழலை அதன்முடிவுக்கும் அடுத்த சுழல் தளத்துக்கும் கொண்டுவரக்கூடிய முழுமையான பூரண தத்துவமாகவும் புரண வாழ்க்கை முறiயாகவும் இருக்கும்."... 'அதையே சர்வோதயப் பொதுவுடமை என்று நான் அழைக்கிறேன்". (மெய்யுள், பக்: 32) என்கிறார்.


ஆக உலகு நல்லபடி இருக்க மனிதர் நல்லபடி வாழ இருக்கும் கோட்பாடுகள் கொள்கைகள் வழிகாட்டல்கள் போதாது. அவற்றில் மாற்றம் சீர்திருத்தம் வேண்டும். அவற்றை மாற்றி தொகுக்கவேண்டும். அதன்வழியாக மனிதர் மகிழ்வாய் வாழ வழிபிறக்கும். அந்த ஓர்மத்துடன் சர்வோதயத்தை உருவாக்கும் ஓர்மத்துடன் இருக்கும் படைப்பே பூரண இலக்கியம் என்பது மு.த.வின் கருத்து.

'...இலக்கியத்தை மட்டும் நோய் தீர்க்கும் மருந்தாக ஏற்றுக்கொண்டால் போதாது...இனிமேல் எல்லாத் தொழில்களையுமே அது கலையாகவும் இலக்கியமாகவும் மாற்றப் போராடவேண்டும்..." (மெய்யுள், பக்:33)

'பூரண இலக்கிய வளர்ச்சி சமூகத்தின் சகல துறைகளின் வளர்ச்சியாகவும் பரிணமிக்கும். அதனால் இன்றைய எழுத்தாளன் அரசியலோடு மிக நெருக்கமான தொடர்புடையவனாக இருக்கவேண்டும்." (மெய்யுள், பக்:35)

' அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக கலைஞர்களும் எழுத்தாளர்களும் இருக்காமல் அவர்களே அரசியல்வாதிகளாகவும் இருக்கவேண்டும். ஒருநாட்டின் மந்திரி சபையில் குறைந்தது இரண்டொரு அரசியல் வாதிகளான கலைஞர்களும், எழுத்தாளர்களும் இனிமேல் இருந்தால்தான், பூரண முழுமைக்காக மத்தியல் ஒப்படைக்கப்படும் அதிகாரம் பயங்கரமான சர்வாதிகாரமாக மாறாமல்இருக்கும்." (மெய்யுள், பக்:37)

'பூரண இலக்கியமும் பூரண வாழ்க்கையும் இவற்றோடு மட்டும் மலராது. ஒவ்வொருவனும் தன் அக ஆழத்தை கண்டுபிடிக்காத வரைக்கும் முழுமையும் பூரணத்துவமும் வரப்போவதில்லை." (மெய்யுள், பக்:38)


' ஒரு சமூகத்தின் உயிர்த்துடிப்பை, அதன் உண்மையான மரபுத்துடிப்பைத் தொடும் எழுத்தாளர்கள் இன்று ஈழத்தமிழச் சமூகத்திற் காணப்படுகின்றனர். அவர்கள் தம் சொந்தப் பிரச்சினைகளுக்கும்;, முழு உலகப்பிரச்சினைகளுக்கும் வழிகாணும் துணிவைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்." (மெய்யுள், பக்:97)


(ஈழத்தின் இலக்கியத்தின் அடிநாதமான போர்ப்பறையைக்)'... கண்டவர்களுக்கும் கேட்வர்களுக்கும் இன்றைய உலக இலக்கிய வளர்ச்சிக்கு ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் எவ்வாறு தலைமை தாங்கலாம் என்ற சந்தேகம் இருக்கமுடியாது." (மெய்யுள், பக்:97)

மு.தவின் முற்கூறல் ஒன்று எவ்வாறு மிகச் சரியாக இருக்கிறது என்று பாருங்கள்:

'ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் கூட்டுமனம் எல்லா நிலைகளிலும் ஏதோ ஓர் அளிவல், எதோ ஓர் அர்த்தத்தில் போர் என்ற ஒன்றுக்கு தயார்ப்படுத்ததுவதாகவே இருக்கிறது. ஆதன் கூட்டுமனத்தில், இடைத்தளத்தில், அடித்தளத்தில் எங்கும் ஏதொ ஓர் வகையில் போர் என்ற ஒன்ற உருப்பெற்றுக்கொண்டிருக்கிறது." (மெய்யுள், பக்:99)

எந்த ஒரு இடத்திலும்; 'இது போதும்" என்று அவர் எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பதுதான் அவரை ஓர் மெய்யிலாளராக கருத இடமளிக்கிறது. மெய்யியலாளருக்கு இருக்கவேண்டிய தொடர்ந்த அடுத்தகட்டத் தேடல், மீண்டும் மீண்டும் கேள்வி என்பன மு.தவிடம் திரும்பவும் திரும்பவும் எழுகின்றது.

மு.தவின் மெய்யிலைச் சுருக்கிப் பின்வருமாறு சொல்லாம்:

சமூகத்தினைக் குணப்படுத்த வேண்டியிருக்கிறது. இது அனைத்துத் தளங்களிலும் நடக்கவேண்டும். அது இலக்கியவழியாகச் சாத்தியம். பூரண இலக்கிய வழியாகச் சாத்தியப்படும். ஆர்தர்.சி கிளார்க்கின் எழுத்துக்கள் எவ்வாறு பல கோட்பாடுகளுக்கு வழிவகுக்கின்றனவோ அதேயளவிற்காவது இலக்கியம் சமூகத்தில் விளைவைத்தரும்.

இந்தப் பூரண இலக்கியம் எதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படவேண்டும் என்ற தேடல் வேண்டும். அதற்கு பொருள்முதல்வாதமோ அல்லது கருத்துமுதல்வாதமோ தனியாகப் பலன்தராது. அதாவது இதுவரைக்குமான மதங்கள் சார் வழிமுறைகள் அல்லது மார்க்சிய வழிமுறைகள் போதாமையுடையன.

ஞானப் பொதுவுடமையும் பொருளாதாரப் பொதுவுடமையும் ஒன்றை ஒன்ற தழுவி வளரவேண்டும். (மெய்யுள், பக்:67)

'இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே தேவராச்சியம் அண்மித்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது...ஆனால் அந்த அறிவித்தலை நம்பியவர்கள்...தேவராச்சியத்துக்குரிய, பொதுவுடமை வழியை இதுவரை நம்பியதில்லை. அதே போல் வழியை நம்பிய பொதுவுடமைவாதிகளோ இதுவரை இறைவனை நம்பியதில்லை. அதனால் இரண்டும் பூரணமாக வென்றதில்லை." (மெய்யுள், பக்:66-67)

எனவே ஆன்மீக அடிப்படையிலான புரிதலுடன் முன்சொன்ன இரண்டையும் உள்வாங்கிய மூன்றாவது அல்லது புதிய அணுகுமுறை வேண்டும். இந்தப் புதிய அணுகு முறை பேர்ஞானத்தை அதாவது தெளிவான பேரறிவைத் தரும்.

இதுவே மெய்முதல் வாதம் என்று அவர் பெயரிடுவது.

இதற்காக அவர் துணைக்கு அழைப்பது இந்தியாவின் தற்போதையச் சிந்தனைகளை உள்வாங்கி விழுங்கிவிட்ட சங்கர அத்துவைதம் என்றும் ஒருமையியலைத்தான்.

கருத்தும் பொருளும் ஒன்றுதான் என்பதை அழுத்த அவர் பிரம்மமமே சக்தி அல்லது சக்தியே பிரம்மம் என்ற ஒருமையியல் கோட்பாட்டை எடுக்கிறார்.

அவற்றின்மூலம் மக்கள் பெறும் மெய்முதல் தெளிவிலிருந்தே மனித குலத்தின் விடுதலை அடையப்பெறலாம்.

அவ்வாறு வரும் மனிதக்குலச் சிறப்பு நிலையை அனைத்தும் கிடைக்கும் சர்வோதயம் என்கிறார்.

'சர்வோதயம் என்றால் என்ன?

சகல மக்களினதும் எழுச்சியையும் சகல துறைகளினது வளர்ச்சியையுமே குறிக்கிறது." (மெய்யுள், பக்:131)

'அறிவு, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், பொதுவுடமை" ஆகியன அனைத்தும் சேர்ந்து இந்தத் தளத்தில் ஏற்பட்ட எழுச்சி கொண்டுவரும் அல்லது வரும் எழுச்சியில் உருவாகியிருக்கும். (மெய்யுள், பக்:61)

II

தளையசிங்கம் வைத்த கருத்துக்களில் பல தென்னிந்தியச் சிந்தனைகளின் தாக்கத்தில் எழுந்தவை. அதேவேளை பொதுவுடமையின் நன்மைகளை அவர் உணராமல் இல்லை. இந்நிலையில் அறிவியலின் புதிய கண்டுபிடிப்புக்களையும் அவர் எடுத்து புதிய மானிடத்தின் முன்னேற்றத்துக்கு உழைக்கவேண்டும் என்கிறார்.

இந்தவகையில் அவரைப்பாதித்த சிந்தனையாளர்களில் அரவிந்தர் முதலாக யேசு, மார்க்ஸ் எனப் பட்டியல் தொடர்கிறது. அறிவியலாளர் என்ற வகையில் இருவரை அடிக்கடி தனது எழுத்துக்களில் குறிப்பிடுகிறார். ஆச்சரியப்படும் வகையில் இருவரும் கூர்ப்பினைப்பற்றிப் பேசியவர்கள். அதிலும் முதலாமவர் ஒரு துறவி. வுநiடாயசன னந ஊhயசனin என்னும் பிரஞ்சத் துறவி. யேசு சபையைச் சேர்ந்த இவரையும் அவரது எழுத்துக்களையும் அப்போதைய போப் தடை செய்து வைத்திருந்தார். அவர் இறந்த பின்பு 1955 இல் தான் அவரது எழுத்துக்கள் வெளியிடப்பட்டன. மற்றவர் யுடனரழள ர்ரஒடநல இன்; உடன்பிறப்பான துரடயைn ர்ரஒடநல. இவர்தான் யுனெஸ்கோவின் முதல் தலைவரும் என்பது உபரிச் செய்தி.
முன்சொன்ன சமூக ஆன்மிகச் சிந்தனையாளர் போலவே இந்த அறிவியல் அறிஞர் இருவரும் அந்தக் காலத்தின் மிகப்பிரபலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மு.தவின் முன்வைப்புக்களின் மீது விமரிசனங்கள் இருக்கின்றன. இவரைப்பற்றி எழுதிய எழுத்துக்களின் மீதும் உள்ளன. அதே போல அவருடைய எழுத்துக்களில் உள் முரண்பாடுகள் உள்ளன எனவும் எண்ண இடமுண்டு.

(இது எனது ஒரு கட்டுரையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டஈ சுருக்கப்பட்ட பகுதி.)
(மீதிப்பகுதியுடன் முழுமையும் பின்னர் தரப்படும்.)

No comments:

Post a Comment